புலிகள் தினம் வெறும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை வரிகளில் பேசிவிட்டு கடந்து செல்வது அல்ல....
உலக காடுகளில் வாழும் புலிகளில் 75 சதவீதம் நம் இந்திய காடுகளில் வெறும் 7% சதவீத வனத்தில் இட நெருக்கடியில் வாழ்ந்து வருகிறது என்பதை வெளியில் எந்த ஒரு அரசும் சொல்வதும் கிடையாது...
காடுகளில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும் ஒரு காடு இயல்பான நிலையில் இருப்பதற்கும் அது புலிகளின் சரணாலயமாக மாற்றப்பட்ட பின்பு அதன் சூழல் எந்த அளவிற்கு கடுமையாக மாறி விடும் என்பதை அனுபவப்பட்டவன் நான் என்பதால் தான் இந்த பதிவே இடுகிறேன்...
புலிகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் எனக்கில்லை ஆனால் அதனை ஒரு காரணமாக வைத்து கொண்டு இது நாள் வரை அங்கு புலிகளின் நடுவே வாழ்ந்து வந்த மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து தர கூட விடாமல் அவர்களை அப்புறப்படுத்துவது தான் மிக முக்கியமான பணியாக புலிகளை பாதுகாப்பு என்ற பெயரில் செய்து வருவது ஏற்கவே இயலாது... அது அவர்களின் பூமி அதனை அவர்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களை சுற்றி தான் இந்த புலியும் இருந்தது. ஆனால் நீங்கள் தீடீரென ஒருநாள் இதனை சரணாலயமாக மாற்றுகிறேன் என கூறி கொண்டு புலிகளின் எண்ணிக்கை செயற்கையாக அதிகரித்து அதன் வாழும் பகுதி என தனியாக பிரித்து அங்கு வாழும் மக்களை பிரிப்பது அடக்குமுறைகள் தான்...
ஆனைமலை புலிகள் காப்பகம் உருவாகும் முன்பு எங்களின் பகுதி உலாந்தி காடு என அழைத்தார்கள் இப்பொதும் அந்த பெயரே தான் நீடிக்கிறது ஆனால் எப்போது இந்திராகாந்தி வன உயிர்களின் உய்விடம் என்பதை ஆனைமலை புலிகள் காப்பகம் என்று மாற்றினார்களோ அன்றிலிருந்து இன்று வரை எங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. என் பகுதியும் புலிகள் காப்பகத்தில் தான் வருகிறது என் ஊரான சர்க்கார்பதி. அதில் டாப்சிலிப், பரம்பிக்குளம் பகுதிகளில் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக மாறி விட்டது என்பதற்கு அடிப்படையான காரணம் இந்த புலிகள் காப்பகம் தான் என நான் அடித்து கூறுவேன்... என் ஊரை சுற்றி மற்றும் மலையை அடிவாரத்தில் தனியார் சுற்றுலா விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இரவு நேரங்களில் இவர்கள் மிக எளிதாக வனங்களின் அதிகமாக ஒளிர கூடிய விளக்குகளை வாகனங்களில் வைத்து கொண்டு இவர்களுக்கு இருக்கும் அதிகாரம், பணம் ஆகியவற்றை வைத்து கொண்டு ஊடுருவ முடியும்... அதிலும் குறிப்பாக இவர்கள் இரவு நேரங்களில் தான் வேட்டையாடும் விலங்குகளை பார்க்கவே விலங்குகள் இந்த விளக்கு ஒளியால் அப்படியே என்ன செய்வது என்பது கூட தெரியாமல் நின்று விடும். இவர்கள் செய்யும் அட்டகாசம், அட்டூழியங்கள் யாவும் அதிகரித்து வருவதற்கு மிக முக்கியமான காரணம் புலிகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டது. நம் மக்களுக்கு காடுகளுக்குள் எங்கு புலி இருக்கும் என அரசே சொல்லி விட்டதால் இவர்களுக்கு வசதியாக போய் விட்டது அதனால் பாதிக்கப்பட போவது புலிகள், வன விலங்குகள் தானே தவிர வேறு எதுவும் இல்லை.
இதில் முதுமலை, களக்காடு முண்டந்துறை சரணாலய பகுதிகளை சுற்றியும் 200 க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் உள்ளன... விடுதி உரிமையாளர்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளை குறிப்பாக புலிகளை கண்ணில் காட்டுவது மூலமாக அவர்களின் விடுதியை தேடி வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள் என அவர்கள் செய்யும் காரியங்களால் வன விலங்கு மனித மோதல்கள், வன விலங்குகள் தங்களின் இடத்தை விட்டு ஊருக்குள் வருவதற்கு அடிப்படையான காரணமே இது போன்ற சுற்றுலா விடுதிகள் தான்... இதில் பல அடர்ந்த வன பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது தான் வேதனையான ஒன்று....
இதை விட பொள்ளாச்சி, ஆழியாரை அடுத்த நவமலை என்ற பகுதியில் சுற்றிலும் வன சூழல் மிகுந்த இடத்தின் நடுவே ஆழியார் அணை ஒட்டிய பகுதியில் தனியாரின் தோட்டம், தங்கும் விடுதி என அமைத்து இருக்கிறார்கள்.. அங்கு இவர்கள் இரவு நேரங்களில் சத்தங்களை எழுப்பி தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை உளவியல் ரீதியாக சித்ரவதை செய்து வருகிறார்கள்... அது எப்படி சுற்றிலும் அடர் வன பகுதியின் மத்தியில் தனியாருக்கு சொந்தமான தோப்பு இருக்கும்... ஆனால் அது எல்லாம் அரசாங்கத்திற்கு எந்த வித பிரச்சனையும் இல்லை ஆனால் மலைவாழ் மக்கள் மட்டும் வனத்தில் வாழ கூடாது ஆனால் கோடிகணக்கில் பணம் வைத்து சுற்றிலும் மின்சார வேலி அமைத்து கொண்டு இருக்கும் இவர்கள் அதே வனத்தில் வாழலாம் என்றால் எதற்காக இந்த புலிகள் தினம், யானைகள் தினம் என கொண்டாடி கொண்டு அதன் படங்களை காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருக்க வேண்டும்...
என் ஆள்மனதில் நீண்ட நெடுங்காலமாக எழுந்து வந்த கேள்விகள் தான் இவையெல்லாம்... அடர்வனத்தை ஒட்டி பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தனியாரின் வசம் எப்படி போனது என்பது ஒருபுறம் ஏன் இன்னும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதனை அரசு கையகப்படுத்த கூடாது என்பது... வெறும் புலிகளின் சரணாலயம் என வெற்று அறிவுப்பு செய்து அதனை கணக்கு எடுத்து, புலிகள் நடமாடும் பகுதிகளை பிரித்து அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி, வேட்டைகளை தடுத்து எண்ணிக்கையை அதிகரித்து மட்டும் இருந்தால் போதுமா... வெறும் 7% வனத்தில் நீங்கள் பாதுகாக்கும் 50 சரணாலய பகுதிகளில் உள்ள 3967 புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து இட நெருக்கடியில் ஒன்றை ஒன்று அடித்து கொண்டு சாகனும் அல்லது அவனி மாதிரி குட்டிகளை தனியாக விட்டு விட்டு உங்களின் துப்பாக்கி குண்டடிப்பட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது தான் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். வருடத்தில் ஒருநாள் புலிகள், யானைகள், வன விலங்குகள், சூழல் தினம் என கொண்டாடி விட்டு அதனை கண்டு கொள்வது கூட இல்லாமல் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றி பெறலாம் என நினைத்து கொண்டு செயல்படும் வரை இந்த நிலைமை மாறவே மாறாது
- பாலகுமாரன்?
இயற்கையை சக உயிரினங்களை நேசிக்கும் அனைவருக்கும் புலிகள் தின வாழ்த்துக்கள் ? #EyarkaiVazhipadu #NaturalWorship #TargetZer0 #PlasticFreeForestZone #tigerday2021