பயணம்-3
பயண வழிகாட்டி: பாலகுமாரன் பா.ஜெ
இயற்கை அறம் சார்ந்த விசயங்களில் நாம் நம் முன்னோர்களின் வழியில் தான் நாம் அனைவரும் பயணம் செய்தாக வேண்டும். காட்டில் வாழும் விலங்குகளில் யானை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காரணம் அது தன் முன்னோர்கள் நடந்த பாதையை என்றுமே மறந்தது இல்லை அவர்கள் சொல்லி விட்டு சென்ற நடைமுறைகளை அப்படியே கடைபிடித்து வருகிறது.
அதனால் தான் இந்த இயற்கை சார்ந்த விடயத்தில் நம் பழங்குடியினர் மரம், சூரியனை வழிபட்ட மாதிரியே காட்டில் வாழும் ஒரு மிக முக்கியமான விலங்கான யானைகளையும் சேர்த்தே வழிபாடு செய்து வந்து இருக்கிறார்கள்.
ஏனெனில் யானைகள் தான், ஒரு காட்டின் பாதுகாவலன் என்பதால் மட்டுமே அல்லாமல் நாம் இந்த வனத்தில் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணமாக யானைகள் இருப்பதால் கூட அவ்வாறு இருக்கலாம். அப்படி என்ன அந்த யானைகளுக்கு தனி சிறப்பு, மரம், சூரியன் போன்று வழிபாடு செய்யும் அளவிற்கு மனிதன் வணங்கி கொண்டு இருந்தான் என்று நம்மில் பலருக்கு யோசிக்க தோன்றும்.
மனிதன் ஏன் கடவுளை வணங்குகிறான் என்றால் அதற்கு காரணம் தன்னை படைத்தவன், காப்பவன் என்று கருதுவதால் தானே..?! அதனை தான் யானைகளும் வனத்தை உருவாக்கி அதனை பாதுகாத்து கொண்டு வருகிறது அதனால் தான் நம் முன்னோர்கள் யானைகளையும் இயற்கையின் ஒரு முக்கியமான அங்கமாக கருதி மனசார வணங்கினான். ( மேலும் யாணைகள் பற்றிய பார்வைக்கு முந்தைய கட்டுரையை படிக்கவும்) தற்போது நாம் மிகவும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய அத்தனை அறங்களையும் கடைபிடிக்காமல் நம் முன்னோர்கள் வகுத்த பாதைகளையும், நீதி நெறி முறைகளையும் விட்டு வெகு தூரத்தில் விலகி வந்து நிற்கிறோம்.
ஒவ்வொரு மனிதனும் தனக்கான ஒரு நீதி, நெறி என வகுத்து கொண்டு வாழ துவங்கிய பின்னர் தான் நாட்டில் பல இன்னல்கள் ஏற்பட மிக முக்கியமான காரணமாகி ஒட்டுமொத்த மனிதனின் வாழ்க்கையையே கேள்விக்கு உள்ளாக்கி விடுகிறது.
ஒரு சமூகம் மாற வேண்டும் எனில், தனி ஒரு மனிதன் தன் செயல்பாடுகளை எல்லாம் மாற்றி கொண்டு இயற்கையின் நீதி, நெறி முறைகளை எல்லாம் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
உடனே நம்மால் அந்த மாற்றங்களை எதிர் கொள்ள இயலாது தான். அதனை படிப்படியாக தான் நாம் இயற்கையின் நியதிகளை கடைப்பிடிக்க இயலும். அதுகுறித்து வரும் வாரங்களில் பார்க்கலாம்...