பயணம்: 1
இயற்கை நமக்கு கிடைத்த ஒரு வரம். நம் ஆதிமனிதர்கள் இயற்கையை தான் வழிப்பட்டு வந்தார்கள். சூரியன், மரம், நீர், காற்று, பூமி என்ற ஐந்தையும் உருவங்களாக இல்லாமல் உணர்வுகளாக மனதில் நினைத்து கொண்டு வழிபாடு செய்தார்கள். வழிபாடு செய்த பின்னரும் இயற்கைக்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்யாமல் பயத்துடனே தான், ஒவ்வொரு செயலும் மேற்கொண்டு வந்தார்கள்.
இயற்கை நன்றாக இருந்தால் மட்டுமே நம்மால் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ இயலும். அது கோபம் அடைந்தால் நாம் முற்றிலும் அழிந்து விடுவோம் என்பதை மிகவும் தீர்க்கமாக நம்பி கொண்டு இருந்தார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த இடத்தில் எல்லாம் இயற்கையை எந்த அளவிற்கு பாதுக்காக்க இயலுமோ அதனை எல்லாம் தொடர்ந்து செய்து கொண்டே வந்தார்கள்.
படிபடியாக மனிதனின் பரிமாண வளர்ச்சியில் அவன் காட்டை விட்டு வெளியேறி வந்து ஆற்றின் ஓரத்தில் தங்க ஆரம்பித்தான். அன்றிலிருந்து இன்று வரை ஆற்றின் பாதி இடத்தை ஆக்கிரமித்து விட்டான்.
நம் ஆதி மனிதர்கள் எதை எல்லாம் பகைத்து கொள்ள கூடாது என அனுதினமும் நினைத்து கொண்டு இருந்தார்களோ அதை எல்லாம் நாகரிக உலகில் உள்ள மனிதர்கள் ஓவ்வொன்றாக செய்து வருகிறோம்.
இயற்கை என்பது அளவற்ற ஆற்றலை தன்னகத்தே கொண்ட ஒன்று. அதனை நாம் வளர்ச்சி என்ற போர்வையில் அதன் ஆற்றலை சக்கையாக பிழிந்து எடுத்து வருகிறோம். நாம் நம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையை மட்டும் தான் பார்க்கிறோம், ஆனால் நமக்கு அளவற்ற ஆற்றலை தரும் இயற்கையை குறித்து, துளியும் சிந்திப்பது இல்லை.
இயற்கை சார்ந்த வாழ்விடங்களில், எதற்காக அதை வழிபட்டு அதற்கு சிறு தீமைகளை கூட செய்யாமல் நம் ஆதி மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை பற்றி நாம் சிறிதேனும் சிந்தித்து பார்த்து இருந்தோம் என்றால், இன்று உலக அளவில் நடந்து வரும் சீர்கேடுகளை எல்லாம் தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
காட்டில் வாழும் மனிதன் கூட தான் வாழவே, விலங்களிடம் இருந்து தற்காத்து கொள்ள பாறை குகைகள், மரத்தின் பெரிய கிளைகளை எல்லாம் இணைத்து வீடு போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி வாழ்ந்தான் பின்னர் விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள ஆயுதங்களை கண்டறிந்து பின்னரே உயரமான இடங்களில் வாழ்ந்த மனிதன் மர குச்சிகளை வெட்டி இலைகளை மேற்கூரைகளாக பயன்படுத்தி வீடு கட்டி தனிதனியாக வாழ ஆரம்பித்தான்.
மர கிளைகளை வெட்டினாலும் அதற்கு ஈடாக பல மரங்களை அவன் வைத்து விடுவான் காரணம் இயற்கையின் மீதான ஒரு பயம் தான் அவனை தொடர்ந்து இயற்கைக்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது.
மனிதன் படிபடியாக அவனுக்குள் ஏற்பட்ட சுய முன்னேற்றம் பற்றிய வளர்ச்சியால் இயற்கையை விட்டு வெகு தூரத்தில் தள்ளி வந்து விட்டான். உருவம் இல்லாமல் உணர்வுகளின் வழியே வழிபட்டு வந்தவன் முதன்முதலில் கல்லை எடுத்து அதனை கடவுளாக சிந்தித்து வழிபாடு செய்தான் பின்னர் அதற்கு தன்னை போன்ற ஒரு தோற்றத்தில் ஒரு உருவத்தை தந்தான், தன்னை காக்க வேண்டும் என நினைத்து தான் உபயோகப்படுத்தி வந்த ஆயுதங்களை எல்லாம் அந்த உருவத்திற்கு தந்து, தன்ன” –‘தான்’ உருவாக்கிய கடவுள் காக்க வேண்டும் என பொறுப்பை அவரிடத்தில் தந்து விட்டு மனிதன் ஒதுங்கி விட்டான்.
எப்போது அவன் இயற்கை வழிபாட்டு முறைகளை எல்லாம் தன்னை போன்ற ஒரு உருவத்தின் மீது செய்ய ஆரம்பத்தானோ அன்றிலிருந்து அவன் இயற்கையின் மீதான பயம் முற்றிலும் போய் விட்டது அந்த பயம் அவன் உருவாக்கிய உருவத்தின் மீது வந்து விட்டது ஆனால் அவனிற்கு தெரியவில்லை அவன் வரைந்த ஓவியம் அவனுள் இருந்த இயற்கைக்கு தான் என்பதே அறியாமல் இயற்கைக்கு எதிராக பல செயல்களை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.
இயற்கை வளங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஆரம்பித்தான் அதன் மீது எவ்வளவு வன்மத்தை காட்ட இயலுமோ அதனை எல்லாம் மிக வேகமாக செய்ய ஆரம்பித்தான் அதனால் இயற்கை காட்டும் கோபத்திற்கு எல்லாம் தான் உருவாக்கிய சிலைகளுக்கு வழிபாடு செய்து அதனை சரிகட்டி விடலாம் என நினைத்தான். மனிதனின் பரிமாண வளர்ச்சியில் அவனிற்கு அறிவு அதிகம் கிடைத்தாலும் அவனின் சிந்தனை சக்தி அபாரமாக இருந்தாலும் இந்த இயற்கை சார்ந்த விடயத்தில் அவன் பூஜ்யமாக தான் இருக்கிறான்..
பயணம் தொடரும்…
ஆசிரியர்
பாலகுமாரன் பா.ஜெ
நிறுவனர் & தலைவர்
டார்கெட் ஜீரோ
பாலகுமாரன் பா.ஜெ அவர்களை, “வனங்களின் வைத்தியன்” என்று சொல்லலாம், ஏனெனில் இவர் செய்யும் செயலுக்கு பொருத்தமான பெயர். ஆம், நாம் பயணங்களின் போது எடுத்து செல்லும் நொறுக்குத் தீணிகளின் மிச்சம் பெரும்பாலும் நெகிழி எனப்படும் பாலித்தீன் பைகள் தான், அதை அப்படியே நாம் வெளியில் வீசுவது தான் நமக்கு தெரிந்த செயல். அவ்வாறு காடு, மலைகளை நோக்கிப் பயணம் செய்பவர்கள் வனங்களில் வீசும் நெகிழிகளை (பாலித்தீன்) வனங்களின் நலன் கருதி அக்குப்பைகளை பொறுக்கி நீக்கி வனங்களை காக்கும் செயலை தான் மேற்கொண்டு வருகிறார், இந்த பாலகுமாரன்.
தான் மட்டும் அல்லாமல் “டார்கெட் ஜீரோ” என்ற அமைப்பைத் தொடங்கி பல களப்பணியாளர்களுடன் வாரத் தொடக்க நாளான ஞாயிற்றுகிழமை தோறும் கடந்த 2018 ஜூன் மாதம் முதல் நெகிழி மட்டும் அல்லாமல், அனைத்துவிதமான மக்கா குப்பைகளையும் பல குடிமகன்கள் குடித்துவிட்டு வீசும் காலி பாட்டில்களையும் வனங்களில் இருந்து நீக்கி வருகிறார். மேலும், மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். அதன் பலனாக “டார்கெட் ஜீரோ” என்ற அமைப்பை தொடர்பு கொண்டு பல கல்லூரிகளில் இருந்தும் மாண மாணவியர்கள் இத்தகைய களப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். வனத்திலிருந்து இதுவரை நெகிழி பைகள், வாட்டர் பாட்டில்கள், மது பாட்டில்கள் மற்றும் இதர கழிவுகள் என சுமார் 7டன் கழிவுகளை நீக்கி வனத்தின் நலம் காக்கிறார்கள்.
பாலகுமாரன் கோவை மாவட்டத்தில் உள்ள மலுமச்சம்பட்டியில் உள்ள SNMV கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார், இவரது பெற்றோர் ஜெயப்பிரகாஷ், கலாவதி ஆவர். இவரது இணையர் ஸ்ரீசரிகா இவர் பாலகுமாரன் பணிபுரியும் அதே கல்லூரியில் இவரும் ஒரு உதவி பேராசிரியர். பாலகுமாரனது பெற்றோர் மற்றும் இணையரின் பெருந்தன்மை, அன்பு இல்லாமல் இந்த வன வைத்தியரின் களப்பணி சாத்தியம் இல்லை, அவர்களுக்கு மிகுந்த நன்றியை பதிவு செய்கிறது நம் “இயற்கை வழிபாடு”. பாலகுமாரன் பிறந்தது பொள்ளாச்சி ஆனால் சிறுவயது முதல் கடந்த வருடம் வரை வளர்ந்தது சர்கார்பதி எனும் வனச்சரகத்தில். அவரது அம்மா ஒரு அரசு ஊழியர் (மருந்தாளுநர்). அவரது பணி நிமித்தமாக சர்கார்பதிக்கு இடம்பெயர்வு. சர்கார்பதி என்ற அருமையான வனச் சரகத்தை பற்றி அவர் மனதின் மொழியே கேட்க கீழே உள்ள முகநூல் குறியை தொடவும் (அவரது வன நேசிப்பு புரியும்) சரி இயற்கை வழிபாட்டில் இவரை பற்றி ஏன் என்று தோன்றலாம்.
இயற்கை பற்றியும், இயற்கை வழிபாடு பற்றியும் நம் இணையதளத்தில் ஒரு குறுந்தொடர் எழுத இருக்கிறார். எனவே அவரை பற்றிய ஒரு சிறு குறிப்பு தான் இது. பாலகுமாரனின் களப்பணிகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு…
முகநூல்: