EIA - 1994 - 2006 - 2020 சட்ட வரைவுகளின் ஒப்பீடு

post img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 குறித்து ஆரம்பத்தில் சூழலியல் ஆர்வலர்கள் பேசும் பொழுது தான் உண்மையில் தெரிய வந்தது..... புதிய வரைவை தாக்கல் செய்ய போகிறார்கள் அது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அவர்களின் கூக்குரலை கேட்ட பின்னர் அது குறித்து வந்த ஆதரவு, எதிர்ப்பு பதிவுகளை அனைத்தும் படித்த பின்னர் இதில் எதோ பிரச்சனை இருக்கிறது என்ற ஐய்யம் எழும்பியது...

சுற்றுச்சூழலை நேசிக்கும் உள்ளங்கள் கூறும் பொழுது அதுவும் பல ஆண்டுகளாக இதில் இருக்கும் நபர்கள் இது குறித்து பதிவு செய்யும் பொழுது இதில் நிச்சயமாக சிக்கல் உள்ளது என உறுதியாக நம்பினேன். ஆனாலும் நான் அந்த வரைவை படிக்கவில்லை...

அதன் பிறகு, அது பற்றிய எனது‌ பார்வையை சமூக தளத்தில் நான் பதிவு செய்ய ஆரம்பித்த நொடியில் இருந்து 83 பக்கம் கொண்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 அறிக்கையை படித்து விட்டீர்களா...?, அதை படிக்காமல் வந்து பேசாதீர்கள் அதில் நீங்கள் சொல்லும் எந்த ஒரு சரத்துமே இல்லை அனைத்தும் பொய் என வாதிட்டார்கள். படிக்காததினால் என்னால் அவர்களுக்கு சரியான பதிலை சரிவர கூற முடியவில்லை.

முக நூலில் நண்பராக இருக்கும் Vidhya Suresh அவர்கள் என்னை தொடர்பு கொண்டு இந்த புதிய (EIA-2030) வரைவை பற்றி தங்களால் பேச இயலுமா என்றார்கள், நானும் சரி என்று அவர்களிடத்தில் உறுதி கொடுத்த பின்னர், நான் செய்த முதல் வேலை 2006 ல் வெளிவந்த இரண்டாவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையையும் தற்போது வெளிவந்த 2020 வரைவு அறிக்கையும் பிரின்ட் எடுத்து அதனை பைன்டிங் செய்து வைத்து கொண்டேன்....

பிறகு ஒரு நாள் தொடர்ந்து இரண்டு அறிக்கைகளையும், வரி விடாமல் படித்து முக்கியமான பகுதிகளான திட்டங்கள், திட்டம் தொடங்க வாங்க வேண்டிய அனுமதிகள், பொதுமக்கள் கருத்துக்கள், திட்டங்களின் அளவீடுகள், திட்டங்கள் செயல்படுத்தும் கால அவகாசம் குறித்தான மிக முக்கியமானவற்றை அடையாளமிட்டு கொண்டேன்.... அதனை மட்டும் தனியாக குறிப்பு எடுத்து கொண்டேன்.... அன்று நான் உறங்கிய நேரம் காலை 3.35.

அடுத்த நாள் மாலை நிகழ்வில் பேசினேன், 2006-ல் இருந்து 2020-ல் எவ்வாறு மாற்றம் செய்து இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பேசினேன், அந்த நிகழ்வு நான்கு மணி நேரம் தொடர்ந்தது, தொடர்ந்து பல்வேறு தளங்களுக்கு சென்றது. பல்வேறு அறிஞர்கள் வந்து தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தனர், மிக அருமையான ஒரு அறிவு பகிர் நிகழ்வாக அமைய பெற்றது.

அதன் பிறகு முதல் முதலில் வெளிவந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 1994-ல் எவ்வாறு இருந்தது என்பதை படிக்கும் ஆவல் வந்தது, சரி அதையும் படித்து விடலாம் என்று அதையும் பிரின்ட் எடுத்து வைத்து கொண்டேன். மூன்று மதிப்பீடு அறிக்கையும் ஒருங்கே வைத்து பார்க்கிறேன் காலம் எவ்வளவு தூரம்...!!! இயற்கையை காக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை வைத்து, இயற்கையை அழிக்க அதே சட்டத்தை மாற்றி இருக்கிறார்கள் என்பதை படித்து முடித்த பின்னர் உணர முடிகிறது.

நாம் ஏன் அந்த காலகட்டத்தில் பிறந்து அதே காலகட்டத்தில் மறைந்து போய் இருக்கலாம் என்ற எண்ணமே தோன்றியது.

முதல் மூன்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் இருக்கும் மாற்றங்கள்....

அதில் மிக முக்கியமானது மக்களிடம் திட்டம் குறித்து பேசும் கால அவகாசம் 1994-ம் ஆண்டு 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையும், 2006-ம் ஆண்டு 7 நாட்களில் இருந்து 30 நாட்கள் வரையும், 2020-ல்10 நாட்கள் இருந்து 20 நாட்களாக மாற்றம் அடைந்து இருக்கிறது.

மக்களின் கவனத்திற்கு இந்த திட்டங்களை கொண்டு சேர்க்க வைக்கும் நாட்கள் தான் அந்த 1994-ல் 30, 2006-ல் 7 மற்றும் 2020-ல் 10 நாட்கள் என மாற்றம் செய்து உள்ளார்கள்...

ஏற்கனவே அனுமதி வாங்கிய திட்டங்களில் புதியதாக எதேனும் மாற்றத்தை, அதிகப்படுத்தினாலோ கட்டாயம் மக்கள் கருத்து தேவை என 1994-ம் ஆண்டு வரைவு சொல்கிறது. 2006-ல் குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லும் திட்டங்களுக்கு மட்டும் மக்களின் கருத்துகள் தேவை என மாற்றி இருக்கிறார்கள், தற்போது 2020-ல் அதன் அளவீடுகள் அதிகப்படுத்தி இருக்குறார்கள்...

பொதுமக்களின் கருத்துக்களை கேட்க கூட அரசுகள் தயாராக இல்லை என்றே அவர்கள் வரைவு எனை எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மக்களின் கருத்துக்களை கேட்க கொடுக்கும் கால அவகாசத்தை கூட கொடுப்பதை மறுக்கின்றன என்பது தெளிவாகிறது இது மக்கள் மீது இந்த அரசுகளுக்கு இருக்கும் அக்கறையை நன்றாக வெளிப்படுத்துகிறது....

அனைத்து வித திட்டங்களும் அரசின் நேரடி கட்டுப்பாடுகளுக்கு கீழ் வருகிறது. அது மாநில, யூனியன் பிரதேசங்களும் அவர்களுக்கு கீழ் உள்ள திட்டங்களும் அடக்கம். முன் அனுமதியின்றி எந்த ஒரு திட்டமும் ஆரம்பிக்க எந்த ஒரு அனுமதியும் இல்லை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 1994, & 2006-ல் சொல்லி இருக்கிறார்கள்....

2006 ல் திட்டங்கள் இரண்டாக A மற்றும் B பிரிக்கப்பட்டுள்ளன.... A பிரிவு திட்டங்கள் மத்திய அரசின் கீழும் B பிரிவு திட்டங்கள் மாநில அரசும் நிர்வாகிக்கும் உரிமையை தருகிறது.... ஆனாலும் முன் அனுமதி இன்றி திட்டம் தொடங்க இயலாது....

ஆனால் 2020-ல் அதே 2006-ல் இருந்த A, B1, B2 என்று வகைப்படுத்தி B2 ல் ஒரு 40 திட்டங்களை சேர்த்து அதற்கு எல்லாம் சூழலியல் தாக்க மதிப்பீடோ, முன் அனுமதியோ, மக்களின் கருத்துக்களோ, தேவையில்லை திட்டங்களை தொடங்கலாம் என மாற்றி இருக்கிறார்கள். மேலும் தேச பாதுகாப்பு திட்டங்கள் என்ற பெயரில் ஆரம்பிக்கும் திட்டங்களை குறித்து யாரும் பேச இயலாது என்பது தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அனைத்து விதமான திட்டங்களின் கால அவகாசங்கள் 1994-ம் ஆண்டு வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே அதுவும் அனுமதி கொடுத்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளார்கள், அதன் பிறகு 2006-ல் சுரங்கங்களுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகளாகவும், நீர் வழி பள்ளத்தாக்கு திட்டங்களுக்கு 10 ஆண்டுகளாகவும், இதர திட்டங்களுக்கு 5 ஆண்டுகள் எனவும் மாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2020-ல் சுரங்க திட்டங்களுக்கு 50 ஆண்டுகள் எனவும், நீர் வழி பள்ளத்தாக்கு திட்டங்கள் 15 ஆண்டுகள் எனவும், இதர திட்டங்கள், 10 ஆண்டுகள் மாற்றி, இயற்கையை எந்த அளவிற்கு சுரண்ட முடியுமா...! அந்த அளவிற்கு சுரண்ட ஒரு அரசே கால அவகாசத்தை நீடித்து இருப்பது வேதனையை தருகிறது.?!

1994 & 2006-ன் திட்ட வரைவின் படி, திட்டம் தொடங்கிய ஆறு மாதங்களுக்கு பிறகு ஆய்வு அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என்பதை, 2020-ல் ஒரு வருடமாக மாற்றி இருக்கிறார்கள்.

தாதுக்களை எடுக்கும் அளவுகள் 2006-ல் A பிரிவில் 50 ஹெக்டார் க்கு மேல், B பிரிவில் 5 ஹெக்டாரில் இருந்து 50 ஹெக்டார் வரை எடுக்க அனுமதி அளித்துள்ளார்கள், இதை 2020-ல் A பிரிவில்100 ஹெக்டார் க்கு மேலாகவும் B1 பிரிவில் 5 ஹெக்டாரில் இருந்து 100 ஹெக்டார் வரையிலும் B2 என்ற பிரிவில் முன் அனுமதி, மக்கள் கருத்து, சூழலியல் தாக்க மதிப்பீடு எதுவும் இன்றி 5 ஹெக்டேர் வரை எடுத்து கொள்ள அனுமதி தந்து இருக்கிறார்கள், அதாவது ஒரு மலையை ஒரே கம்பெனி உடைக்க இயலாது எனில்..! அதனை சில நிறுவனங்கள் தனித்தனியாக, சிறு சிறு பாகங்களாக பிரித்து உடைப்பது எளிது என்ற ஐய்யப்பாடு எழுகிறது....

அதே போல நிலக்கரி எடுக்கும் சுரங்கங்களின் அளவுகளில் 2006-ல் A பிரிவில் 150 ஹெக்டார் எனவும் B பிரிவில் 5 ஹெக்டாரில் இருந்து 150 ஹெக்டார் வரை எடுக்கலாம் என மாற்றம் செய்து இருந்தார்கள், அதை குறைத்துள்ளார்கள் 2020-ல் A பிரிவில் 100 ஹெக்டார் எனவும் B1 பிரிவில் 100 க்கு குறைவாகவும் என இரண்டு பிரிவுகளிலும் 50 ஹெக்டார் அளவுகளை குறைத்து உள்ளார்கள். ஆனால் சுரங்க கழிவுகளை கொட்டும் இடங்களுக்கு எந்த வித அனுமதியும் தேவையே இல்லை என சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!? கழிவுகளை கொட்ட ஒர் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு இருக்கும் மக்களிடத்திலோ, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகளையோ செய்ய வேண்டியது இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய அளவில் சூழலியல் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.!?

அதன் பிறகு உள்ள அனைத்து வித திட்டங்களிலும் சிறிதாக உயர்த்தி உள்ளார்கள் 50MV வரை சில திட்டங்களில் அதிகப்படுத்தி உள்ளார்கள். சில திட்டங்களுக்கு 2006-ல் இருந்த அளவீடுகளில் எந்த வித மாற்றமும் செய்யாமல் அதை அப்படியே பயன்படுத்தி உள்ளார்கள்.

கட்டிடங்கள் கட்ட 2006-ல் இருந்த 20000 ச.கி.மீ இருந்து 1,50,000 ச. கிமீ வரையில் இருந்த அளவீடு 2020-ல் 1,50,000 வரையில் இருந்து 50 ஹெக்டார் வரை உயர்த்தியுள்ளார்கள். இது எவ்வளவு பெரிய சூழலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்து பார்த்தாலே பதறுகிறது..!!

1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை கொண்டு வந்ததன் காரணமே "போபால்" போன்ற கொடூரமான நிகழ்வு நடந்து விட கூடாது என்ற காரணத்தால் தான் ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திட்டங்களை கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சி என்ற போர்வையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட்டார்கள் என்பதே உண்மை. கடைசியாக விசாகப்பட்டினத்தில், நடந்த "விஷ வாயு கசிவு", நெய்வேலி நிலக்கரி 'பாய்லர் வெடிப்பு' என நேரடி பிரச்சனையும், மேலும் ஸ்டெர்லைட், தோல், ஆயத்த, ரசாயன மற்றும் தாது, நிலக்கரி சுரங்க ஆலைகளால் நடைபெறும் மறைமுக பிரச்சனைகள் என அனைத்தும் அதன் பின் வந்த அரசுகளால் கண் முன்னே கடந்த 20 ஆண்டுகளில் நடந்தேறியது.

உலகநாடுகளில் வளர்ந்த நாடுகள், தங்களின் குப்பைகளை கொட்ட இடத்தை உலக வரைபடங்களில் தேடுவார்கள் போல, அதில் அவர்களுக்கு ஏற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று, அதனால் தான் இங்கு பல திட்டங்கள், பல நாடுகளால் தடைசெய்யப்பட்ட ராசயனங்கள், பூச்சி கொல்லிகளை தயாரிக்கும் உற்பத்தி ஆலை, தோல் பதனிடும் ஆலை, நீரை பாழ்படுத்தும் ஆயத்த ஆலைகள், என அனைத்து வித தொழிற்சாலைகளை இங்கு ஆரம்பித்து அதன் உற்பத்தி பொருட்களை மட்டும் அவர்கள் ஏற்றுமதி செய்து கொண்டு, அவர்கள் நாட்டு குப்பைகளை மட்டும் நம் நாட்டில் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறார்கள்.

நம் நாட்டில் ஆளும் எந்த ஒரு அரசிற்கும் நாட்டின் வளங்களை காக்கும் எந்த ஒரு அக்கறையும் இருந்ததாக தெரியவில்லை, இருக்கும் வளங்களை கொள்ளை அடிக்க அனைத்து வித விதமான வழிகளையும் ஏற்படுத்தியுள்ளார்கள். அதற்கு இந்த வரைவு, தங்க நாற்கர சாலைகளையே ஏற்படுத்தி தந்து இருக்கிறது.

சுற்றுச்சூழல் மதிப்பீட்டில் இந்தியா வகிக்கும் இடம் 168. சுற்றுச்சூழல் அதிகம் பாதித்த நாடுகளில் ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. இவ்வளவு பெரிய சூழலியல் பிரச்சனைகளை கொண்ட ஒரு நாட்டில் அனைத்து விதமான திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் வளங்களை அழிக்க முற்படுவது என்பது இனி பிறவாத தலைமுறை, பிறவாமல் கருவிலே அழிந்து விடலாம். இனி இருபதாண்டுகளில் இப்போது இருக்கும் நிலையை விட பல மடங்கு சிக்கல்களை நம் நாடு எதிர் கொள்ள போகிறது. அதை ஏன் அவர்கள் அனுபவிக்க வேண்டும்.??

அனைவரும் தயவுசெய்து சூழலியலை நினைத்து பாருங்கள், அதற்காக உங்கள் குரலையும் பதிவு செய்யுங்கள்.

- Balakumaran JKS

Read All Articles

Contact

இயற்கை வழிபாடு பற்றி அறிந்து கொள்ள எங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Call:

+91 949 992 1471

சகமனிதன் ஒன்றுபட, சமத்துவ வழிபாடான இயற்கை வழிபாடே அவசியம். பிரிவுகள் இல்லா, பிளவுகள் இல்லா, வழிபாட்டுதள முரண் இல்லா, வழிபாட்டு நுழைவு மறுப்பு இல்லா, அமைதியான வாழ்க்கை முறைக்கும்... கொண்டாட்டமான மனநிலையை அடையவும்... மனநிறைவு பெறவும், "இயற்கை வழிபாடே" சிறந்த வழி... மனிதம் ஒன்றுபட்டு மகிழவும் & இயற்கையை சிதைக்காமல் இன்புற்று வாழவும் இணைவோம் வாருங்கள்...

Title Goes Here

Close